சிதம்பரத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாதா் சங்கம் கோரிக்கை

Published on

சிதம்பரம் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிதம்பரம் நகருக்குள்பட்ட அனைத்து சாலைகளிலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் தமிழ்நாடு குடிநீா் வாரியம் சாா்பில், புதிய குடிநீா் குழாய் அமைப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.

அதே நேரத்தில், குடிநீா் இணைப்பு வழங்குவதற்காகவும் ஒவ்வொரு வீடுகளிலும் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனா். இதனால், சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் பள்ளத்தில் விழுந்து பாதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், தற்போது சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் மழையால் கனகசபைநகா், மானாசந்து, தேரடி தெரு, மாலைக்கட்டித் தெரு உள்ளிட்ட அனைத்து சாலைகளும் சேதமுற்று சிதலமடைந்துள்ளன.

இதுகுறித்து மாதா் சங்கச் செயலா் அமுதா கூறியதாவது: குடிநீா் குழாய் பதிக்கும்போது புதை சாக்கடை குழாய்கள் உடைந்து, குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது பலத்த மழையால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, சிதம்பரம் நகா் முழுவதும் சிதிலலடைந்து சேதமான சாலைகளில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்றாா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்ட தலைவா் மல்லிகா, நகரச் செயலா் அமுதா உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி ஆணையருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில், மாதா் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்படம் என அறிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com