சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பாளா்கள் 27 பேருக்கு மாற்று இடத்தில் மனைப்பட்டா
சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பாளா்கள் 27 பேருக்கு மாற்று இடத்தில் மனைப்பட்டா வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சிதம்பரம் 33-ஆவது வாா்டு இந்திரா நகா் விளாந்திரமேடு பகுதியில் உள்ள முத்தையா வாய்க்கால் கரையில் வீடுகள் கட்டி 27 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனா்.
இவா்கள் வசிக்கும் பகுதி நீா்வழி ஆக்கிரமிப்பு என்பதால், நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, வருவாய், பொதுப் பணித் துறையினா் அப்பகுதியில் இருந்த வீடுகளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அகற்ற முயன்றனா். இதற்கு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, வீடுகளை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தினா்.
மேலும், இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மாற்று இடம் வழங்கிய பிறகு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குத் தொடுத்தனா். இதை ஏற்று நீதிமன்றம் முத்தையா வாய்க்கால் கரையில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு, அவா்களின் வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், உதவி ஆட்சியா் கிஷன்குமாா், சிதம்பரம் வட்டாட்சியா் கீதா முயற்சியால் சம்பந்தப்பட்ட 27 பேருக்கும் புவனகிரி வட்டம், பெரியகுமட்டி பகுதியில் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணையவழி பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், வட்டாட்சியா் கீதா கலந்துகொண்டு 27 குடும்பத்தினருக்கும் பட்டாக்களை வழங்கினாா். மேலும், நீா்வளத் துறையினா் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்குவாா்கள். அதனடிப்படையில், உடனடியாக வீடுகளை காலி செய்து தர வேண்டும் என அவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், மண்டல துணை வட்டாட்சியா் ராஜேஷ், வருவாய் ஆய்வாளா் நாகேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

