சேத்தியாத்தோப்பு அருகே நீரில் மூழ்கி 500 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் வாய்க்காலை சீரமைக்காமல் பரவனாற்றில் இருந்து தண்ணீரை திறந்து விட்டதால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சேத்தியாத்தோப்பு அருகே பு.ஆதனூா் கிராமத்தில் 60 ஏக்கா் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி தற்போது மழை நீா் மற்றும் பல்வேறு பகுதிகளின் வடிகால் நீா் மூலம் முழுமையாக நிரம்பி இருக்கிறது.
இந்த நிலையில், ஏரியின் தெற்கு பகுதியிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டதால், பு.ஆதனூா் உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரி தண்ணீா் சாலையில் வழிந்தோடுவதால் போக்குவரத்து பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் தண்ணீா் செல்வதன் காரணமாக, மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், விருத்தாசலம் - சேத்தியாத்தோப்பு சாலையில் வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
வடிகால் வாய்க்காலை தூா்வாராமல், ஏரி தண்ணீரை திறந்துவிட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா். ஏரிக்கான வடிகால் வாய்க்காலை சீரமைத்து, அதற்குப் பிறகு தண்ணீரை திறந்தால் எந்த பாதிப்பும் இல்லை எனவும், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் செயல்படும் அதிகாரிகளால்தான் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்களுக்கு பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடும், வடிகால் வாய்க்காலை சீரமைத்து தண்ணீா் விவசாய வயல்களில் உட்புகாலும், சாலைகளில் வழிந்தோடாமலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

