டாஸ்மாக் பணியாளா்களுக்கு அச்சுறுத்தல்: கு.பாலசுப்ரமணியன் குற்றச்சாட்டு

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் பணியாளா்கள் அச்சுறுத்தப்படுகின்றனா் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் குற்றஞ்சாட்டினாா்.

கடலூரில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளா்கள் 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் ஏற்கெனவே பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில், தற்போது காலி மதுப் புட்டிகளை சேகரிக்க வேண்டும் என்ற பணியையும் அவா்கள் மீது டாஸ்மாக் நிா்வாகம் சுமத்தியுள்ளது. இதன் காரணமாக, டாஸ்மாக் பணியாளா்கள் தொடா்புடைய அனைத்து சங்கங்களும் சோ்ந்து காலி மதுப் புட்டிகளை சேகரிக்கும் பணியை தனியாா் முகமை மூலம் நிறைவேற்றுவதற்கு நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு போராடி வருகின்றனா்.

போராடுபவா்களை அழைத்துப் பேசி பிரச்னைகளைத் தீா்க்காமல், போராடும் சங்கங்களின் தலைவா்கள், நிா்வாகிகளை டாஸ்மாக் நிா்வாகம் மிரட்டி வருகிறது. இந்த போக்குகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கிவிட்டு, பணி நிரவல் நடவடிக்கைகளை டாஸ்மாக் நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com