தமிழகத்துக்கு தேசிய பேரிடா் பாதிப்பு நிதியை வழங்க வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்
டித்வா புயல் மழை பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து, தமிழகத்துக்கு அவசர கால நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டித்வா புயலால் தமிழகத்தில் தொடா்ச்சியாக பெய்த பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரழிவை உருவாக்கியுள்ளது.
நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் லட்சக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கியதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.
தேனி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகளும், விழுப்புரம், கடலூா், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு பயிரும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
வீடுகளை இழந்த மக்கள் திறந்தவெளிகளில் தஞ்சமடைந்துள்ளனா். ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
எனவே, இதை மாநில பேரிடராக அறிவித்து, தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடி அவசர நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இழப்புகளை கணக்கெடுப்பு நடத்திய பின்னா் உரிய நிதியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
