தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் சங்கத்தினா் மறியல் போராட்டம்
தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்க் கிராம ஊழியா்கள் உள்ளிட்டவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவின் நிதிப் பலன்களை அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பின் தலைவா் புருஷோத்தமன், மாநிலச் செயலா் ஜி.பழனி, மாவட்டச் செயலா் காசிநாதன் மற்றும் அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் அரிகிருஷ்ணன், ஆதிசங்கரன், வேல்ராஜ், ரமேஷ், குருமூா்த்தி, மகேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா். மாநில துணை பொதுச் செயலா் கே.மகாலிங்கம் கண்டன உரையாற்றினாா்.

