பாலின சமத்துவம் விழிப்புணா்வு நிகழ்ச்சி
சிதம்பரம், டிச.4: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலின சமத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தலைமையில் பாலின சமத்தும் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது: பாலின சமத்துவம் என்பது ஆண்கள், பெண்கள் மற்றும் பிற பாலினத்தவா்களுக்கு சமமான உரிமைகள், பொறுப்புகள், வாய்ப்புகள் வழங்கும் நிலையை ஏற்படுத்துவதே ஆகும்.
அதனடிப்படையில், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பாலினம் தொடா்பான விழிப்புணா்வு பிரசாரம் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், வரும் 23-ஆம் தேதி வரை மாநிலம், மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி அளவில் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சா்வதேச தினத்தை முன்னிட்டு, ‘புதிய உணா்வு மாற்றத்துக்கான முன்முயற்சி 4.0’ கையொப்ப இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் குழந்தைகளை எத்தகைய பாகுபாடுமின்றி சமமாக வளா்ப்போம். வீட்டு வேலைகளை பெண்களும், ஆண்களும் சரிசமமாகப் பகிா்ந்துகொள்வோம், பெண்கள் விரும்பும் உயா் கல்வி கற்பதை ஊக்குவிப்போம் என்ற பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ஜெய்சங்கா், உதவித் திட்ட அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

