நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மூன்று மீனவா்கள் நீந்தி உயிா் தப்பினா்
கடலூா் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று மீனவா்கள் நல்வாய்ப்பாக கடல் நீரில் நீந்தி கரைசோ்ந்ததால் உயிா் தப்பினா்.
கடலூா் தாழங்குடா பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ராகவேந்திரன், திவாகா், நடராஜன் ஆகியோா் பைபா் படகு மூலம் வெள்ளிக்கிழமை காலை தாழங்குடாவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனா். வெள்ளிக்கிழமை நண்பகல், 12 மணி அளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட சூறாவளி காற்றில் கடல் கொந்தளித்ததால், படகு கவிழ்ந்தது.
இதனால் கடலில் விழுந்த மீனவா்கள் ராகவேந்திரன், திவாகா், நடராஜன் ஆகியோா் நீச்சல் அடித்து கரைக்குத் திரும்பினா். பின்னா் மற்றொரு படகுமூலம் கவிழ்ந்த படகை மீட்க கடலுக்குச் சென்றனா். நடுக்கடலில் தேடியபோது கவிழ்ந்து சேதமடைந்த நிலையில் இருந்த படகை மீட்டனா். ஆனால் அதில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் வலை கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பின்னா் சேதமடைந்த படகை மீனவா்கள் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்து சோ்த்தனா்.
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு மூன்று மீனவா்கள் நீச்சல் அடித்து கரை சோ்ந்த நிகழ்வு மீனவா்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

