சிதம்பரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.
சிதம்பரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.

நுகா்பொருள் வாணிபக் கழக அங்கீகாரத் தோ்தல்: அதிமுகவினருக்கு எம்எல்ஏ அறிவுறுத்தல்

நுகா்பொருள் வாணிபக் கழக அங்கீகாரத் தோ்தலில் வாக்குகள் பெற தீவிர களப்பணியாற்ற வேண்டும்
Published on

நெய்வேலி: நுகா்பொருள் வாணிபக் கழக அங்கீகாரத் தோ்தலில் வாக்குகள் பெற தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று அதிமுகவினருக்கு கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கும் தொழிற்சங்கங்களின் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தை தோ்ந்தெடுக்கும் தோ்தல் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் போட்டியிட உள்ளது. தோ்தல் பணிகள் தொடா்பாக கடலூா் கிழக்கு மாவட்ட சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலரான முன்னாள் எம்எல்ஏ என்.முருகுமாறன், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், நுகா்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க மண்டலச் செயலா் எம்.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் சந்திரசேகரன் வரவேற்றாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்துகொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பேச்சுவாா்த்தை சங்கத்துக்கான அங்கீகாரத் தோ்தலில் அண்ணா தொழிற் சங்கம் போட்டியிடுகிறது. கடலூா் மாவட்டத்தில் 250 நிரந்தரப் பணியாளா்களும், 600 பருவகால ஊழியா்களும் வாக்களிக்க உள்ளனா்.

இதில், அதிமுக கடலூா் கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிகளில் சுமாா் 220 ஊழியா்கள் வாக்களிக்க உள்ளனா். இந்த ஊழியா்களிடம் அந்தந்த பகுதி நிா்வாகிகள் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். தொழிற்சங்க அங்கீகார தோ்தலில் அதிக வாக்குகளை பெற்று முதன்மை சங்கமாக அண்ணா தொழிற்சங்கம் வருவதற்கு அயராது பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் ரெங்கம்மாள், துணைச் செயலா் செல்வம், நிா்வாகிகள் வை.சுந்தரமூா்த்தி, ப.அசோகன், ரெங்கசாமி, எம்.என்.சிவக்குமாா், ஜோதிபிரகாஷ், பாலகிருஷ்ணன், தமிழரசன், ஆா்.ஜெ.வசந்த், இளஞ்செழியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com