என்எல்சி-ஒடிசா நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்த என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் ஒடிசா நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒடிசா மாநிலம், புரியில் உலகளாவிய எரிசக்தித் தலைவா்கள் உச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் மற்றும் ஒடிசா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் ஆகியன ஒரு முக்கியப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை முறைப்படி பரிமாற்றிக்கொண்டன.
ஒடிசாவின் நீண்ட கால தூய்மையான எரிசக்தி செயல் திட்டத்திற்கு வலுசோ்க்கும் வகையில், சூரிய சக்தித் திட்டங்கள், கலப்பினத் திட்டங்கள், கூரை மேல் சூரிய சக்தித் திட்டங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றை இணைந்து உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காகும்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புவனேஸ்வா் பிரிவு பிராந்திய மேலாளா் ரோஹித் குமாா் பாண்டே, அதன் துணை நிறுவனமான என்ஐஆா்எல் நிறுவனத்தின் சாா்பிலும், ஒடிசா அரசின் எரிசக்தித்துறை கூடுதல் செயலா் மற்றும் ஒரெடா லிமிடெட் தலைமைச் செயல் அதிகாரியான சைதத்த பிப்லப் கேசரி பிரதான் ஒடிசா அரசு சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணத்தை முறைப்படி பரிமாறிக் கொண்டனா்.
ஒடிசா மாநில துணை முதலமைச்சரும், எரிசக்தித்துறை அமைச்சருமான கனக் வா்தன் சிங் தியோ, ஒடிசா அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலரான விஷால் குமாா் தேவ், கிரிட்கோ லிமிடெட் மேலாண்மை இயக்குநா் சத்யபிரியா ரத், ஒடிசா நிதிச் சேவையின் நிதி ஆலோசகா் மற்றும் கூடுதல் செயலரான டாக்டா் தேவி தத்தா திரிபாதி மற்றும் அரசு உயா் அதிகாரிகள் பலா் பங்கேற்றுச் சிறப்பித்தனா்.

