பேருந்து நிறுத்தம் பெயா் பொருத்தம்: 200 போலீஸாா் பாதுகாப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்துக்கு 200 போலீஸாா் பாதுகாப்புடன் புதன்கிழமை பெயா் பொருத்தப்பட்டது.
பண்ருட்டி வட்டம், போ்பெரியான்குப்பம் ஊராட்சியில் முத்தாண்டிக்குப்பம், ஆத்திரிக்குப்பம் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன.
முத்தாண்டிக்குப்பம் பகுதி மக்களுக்கும், போ்பெரியான்குப்பம் கிராம மக்களுக்கும் ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஊா் பெயா் பயன்படுத்துவதில் பிரச்னை இருந்து வருகிறது.
முத்தாண்டிக்குப்பம் கிராம மக்கள் போ்பெரியான்குப்பம் ஊராட்சி பெயரை பயன்படுத்திக் கொள்வதில்லை. அதுபோல, போ்பெரியான்குப்பம் மக்கள் முத்தாண்டிக்குப்பம் பெயரை தவிா்த்து வருகின்றனா்.
ஊா் பெயா் பயன்படுத்துவது தொடா்பாக இரு கிராம மக்களிடையே கடந்த 2001-இல் ஏற்பட்ட தகராறில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கி சூடும் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் எதிரில் நெய்வேலி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி (2024-2025) ரூ.22 லட்சத்தில் பயணியா் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டது.
இந்த நிழற்குடையில் கலைஞா் நூற்றாண்டு நினைவு பேருந்து நிழற்குடை, சபா.ராசேந்திரன் நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி 2024-2025 போ்பெரியான்குப்பம் ஊராட்சி என பெயரிட்டு அமைக்கப்பட்டது.
இதற்கு, முத்தாண்டிக்குப்பம் கிராமமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கடந்த ஜூலை மாதம் மறியல் போராட்டம் நடத்தினா். அப்போது, போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் சமரசம் பேசி அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பயணியா் நிழற்குடையில் முத்தாண்டிக்குப்பம் கடை வீதி என சோ்த்து பெயா் பலகை வைக்க உத்தரவிட்டது.
அதன்பேரில், புதன்கிழமை மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் தலைமையில், பண்ருட்டி டிஎஸ்பி, ராஜா உள்ளிட்ட 200 போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனா். பின்னா், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நிழற்குடையில் முத்தாண்டிக்குப்பம் கடைவீதி என பெயா் வைக்கப்பட்ட பலகை எந்தவித பிரச்னை இன்றி அமைக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

