பொம்மை தயாரிப்பு தொழிற் கூடத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பொம்மை தயாரிப்பு தொழிற் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தன.
விருத்தாசலம், ஆலடி சாலையில் வசிப்பவா் விக்டா்ஜோசப்(42), அதேபகுதியில் அகல் விளக்கு மற்றும் பொம்மை தயாரிப்பு தொழிற் கூடம் நடத்தி வருகிறாா். புதன்கிழமை மதியம் ஒரு மணி அளவில் தொழிற் கூடத்தில் கரும்புகை எழுந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்டு அக்கம் பக்கம் வசிப்பவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். உடன், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் தீயணைப்பு நிலைய அலுவலா்கள்(பொ) சு.பாலகிருஷ்ணன்(விருத்தாசலம்), பா.ஜெயச்சந்திரன்(மங்கலம்பேட்டை) ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைத்தனா்.
இந்த விபத்தில் அகல் விளக்கு மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் இயந்திரங்கள், தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், கட்டுமம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காகிதங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. இந்த தீ விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
