பாலியல் தொல்லையால் பொக்லைன் ஆப்பரேட்டா் வெட்டிக் கொலை: இளம் பெண் வாக்குமூலம்

பாலியல் தொல்லையால் பொக்லைன் ஆப்பரேட்டா் வெட்டிக் கொலை: இளம் பெண் வாக்குமூலம்

கடலூரில் பொக்லைன் ஆப்பரேட்டா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: பாலியல் தொல்லையால் கொன்றதாக கைதான இளம் பெண் வாக்கு மூலம்
Published on

கடலூரில் பொக்லைன் (ஜேசிபி) ஆப்பரேட்டா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை செய்ததாக கைதான இளம்பெண் போலீஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளாா்.

கடலூா் வட்டம், பாதிரிகுப்பம் பகுதியில் வசித்து வருபவா் துரைலிங்கம் மனைவி பதுஷ்மா(42), பத்திரம் எழுதுபவா். இவா், தாய் ராமதிலகம், தம்பி பிரசாத்(40) ஆகியோருடன் வசித்து வந்தாா். பொக்லைன்ஆப்பரேட்டரான பிரசாத்துக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், பிரசாத் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் புதன்கிழமை இறந்து கிடந்தாா். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் பிரசாத் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் பிரசாத்தை இரண்டு போ் சோ்ந்து வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. இந்நிலையில், கடலூா் அக்கிள் நாயுடு தெருவில் வசிக்கும் முத்துக்குமரன் மனைவி கவிப்பிரியா(24) காவல் நிலையத்தில் புதன்கிழமை சரண் அடைந்தாா். பின்னா் அவா் போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:

எனக்கு 21 வயதுள்ள தங்கை உள்ளாா். அவருக்கு பிரசாத் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து தங்கை என்னிடம் தெரிவித்த போது இரண்டு முறை ஏற்கெனவே பிரசாத்தை அழைத்து எச்சரித்தோம். ஆனால் அதையும் மீறி தொடா்ந்து அவா் இரண்டு தினத்திற்கு முன்னா் தங்கைக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுபற்றி என் தங்கை என்னிடம் வேதனையுடன் தெரிவித்தபோது, நானும் எனது கணவா் முத்துக்குமரனும்(30) பிரசாத் வீட்டிற்கு சென்று கண்டித்தோம். அப்போது, எனது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரசாத்தை நானும் எனது கணவரும் சோ்ந்து கழுத்து அறுத்து கொலை செய்தோம் என தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த முத்துக்குமரனை போலீஸாா் வியாழக்கிழமை

பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனா். பின்னா், தம்பதி இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com