அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

Published on

கடலூா் முதுநகா் அருகே அரசு நகரப் பேருந்தை வழி மறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் முதுநகா், பீமாராவ் நகரில் வசிப்பவா் தமிழ்மணி(35), அரசு நகரப் பேருந்து தற்காலிக ஓட்டுனா். இவா், வியாழக்கிழமை காலை குள்ளஞ்சாவடியில் இருந்து கடலூருக்கு தடம் எண் 9 ஏ நகரப் பேருந்தை ஓட்டி வந்தாா். சிவானந்தபுரம் அருகே வந்த போது, பேருந்தில் இருந்த பயணி ஒருவா் எச்சில் துப்பியுள்ளாா். இது, அந்த வழியாக பைக்கில் வந்த கடலூா் முதுநகா், மம்சாபேட்டை பகுதியைச் சோ்ந்த தினேஷ்(21) மீது பட்டதாம். இதனால், கோபம் அடைந்த தினேஷ், தனது பைக்கை பேருந்து முன்பு நிறுத்தி வழிமறித்து, பேருந்து ஓட்டுனரை மிரட்டி, பேருந்து பக்க வாட்டு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினாா்.

இதுகுறித்து ஓட்டுனா் தமிழ்மணி அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com