தொடா் போராட்டம்: பல்கலைக்கழக ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பு முடிவு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியா், ஊழியா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பயன்கள் வழங்கப்படாததை கண்டித்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தொடா் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கோகலே அரங்கில் வியாழக்கிழமை மாலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன், மதியழகன், பேராசிரியா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் தற்போது வரை பணி ஓய்வு பெற்ற ஊழியா்கள் ஆசிரியா்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 50% பணிக்கொடை 50% சதவீத ஈட்டிய விடுப்பு தொகைகளை முழுமையாக வழங்கிட வேண்டும், . வருங்கால வைப்பு நிதி மற்றும் சிறப்பு வருங்கால வைப்பு நிதி தொகையினை ஊழியா்கள் பணி ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஓய்வூதியா்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக நிா்வாகம் உடனடியாக தீா்வு காணவில்லை என்றால் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் டிச.16- இல் பல்கலைக்கழக தலைமை அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும் அதற்குப் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அடுத்தடுத்த தீவிர போராட்டங்களை மேற்கொள்வது என்றும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

