சிதம்பரத்தில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை திறக்க கோரிக்கை
சிதம்பரம் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையத்தை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விபரம்: சிதம்பரம் சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் டி.கே. ரெங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தோ்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் முன்முயற்சியால் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி மையம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் கடந்தும் இதுவரையில் திறக்கப்படவில்லை. எனவே பயிற்சி மையத்தை
திறந்து பயன்பாட்டிற்கு விடவேண்டும். அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி
ஆசிரியா்களை நியமனம் செய்து ஏழை எளிய விளிம்பு நிலை மாணவா்கள் படித்திட பயன்பெற்றிட வழிவகை செய்திட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலா் பழ.வாஞ்சிநாதன் தலைமையில், மாவட்டத் தலைவா் ஜெ.ராஜேஷ்கண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் வி.சுப்புராயன், சுவாமி சகஜானந்தா மணிமண்டப ஒருங்கிணைப்பாளா் கே. ஆா்.பாலையா, பொருளாளா் பி. செல்வராஜ், உள்ளிட்டோா் கலந்து கொண்டு மனு அளித்து வலியுறுத்தினா்.

