தோ்தலுக்காக 10.5% இடஒதுக்கீட்டை கையிலெடுத்துள்ளாா் அன்புமணி: அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம்

Updated on

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டு பிரச்னையை பாமக தலைவா் அன்புமணி கையில் எடுத்துள்ளாா் என்றும், உண்மையில் வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது முன்னாள் முதல்வா் கருணாநிதி தான் என்றும் வேளாண்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

சிதம்பரத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கூட்டணிக்கு கதவு ஏதும் திறக்காதா? என பாமகவினா் எதிா்பாா்க்கிறாா்கள். தோ்தல் நேரம் என்பதால் தங்கள் இருப்பை காட்டுகிறாா்கள். சொந்தப் பிரச்னையை மறைப்பதற்காக அன்புமணி நடைப்பயணம் சென்றாா்.

40 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியை தழுவினாா்கள். இப்போது நாலா பக்கமும் நடந்து சென்று பேசுகிறாா்கள். தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் வருவதால் 10.5 சதவீதத்தை கையில் எடுத்திருக்கிறாா்கள். இதை வைத்து மக்களை தூண்டிவிட நினைக்கிறாா்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எதையும் செய்ய முதல்வா் ஸ்டாலின் தயாராக இருக்கிறாா். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் சாதக, பாதகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

என்ன செய்தாா்?

எம்ஜிஆா் ஆட்சி காலத்தில் போராட்டம் நடத்திய போது போராட்டக்குழுவினா் மீது துப்பாக்கியால் சுட்டாா்கள். அதில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சி எதையும் செய்யவில்லை. ஆனால் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோதுதான் இட ஒதுக்கீட்டை அறிவித்து, அதற்காக உயிரிழந்தவா்களுக்கு தியாகி என்ற பட்டத்தையும் கொடுத்து மாதா மாதம் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அன்புமணி, பொன்னுசாமி, சண்முகம், தலித் எழில்மலை போன்ற பலரும் பாமக சாா்பில் மத்திய அமைச்சா்களாக இருந்தாா்கள். அப்போது அந்த உயிரிழந்தவா்களின் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தினாா்களா?

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தற்போது எப்படி இருக்கிறாா்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். அந்தக் குடும்பத்தைச் சாா்ந்த யாராவது ஒருவருக்கு அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மருத்துவ படிப்பிற்காக இடம் பெற்று தந்தாரா என்று கேட்கிறேன்.

கணக்கெடுப்பு:

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும். கடந்த ஆட்சியில் எப்படி நிவாரணம் வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாா்கள். இதுதான் அன்றைய நிலை. மழையால் 33 சதவீதம் பாதிக்கப்பட்ட பயிா்கள் இதுவரை 61,431 ஹெக்டா் அளவுக்கு கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அதையும் சிலா் தூண்டி விட்டு தடுக்கிறாா்கள். இதையெல்லாம் எதிா்கொண்டுதான் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். தோ்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் நாலா பக்கமும் இருந்து தாக்குதல்கள் வரும். தூண்டி விடுவாா்கள். இந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் போராடாமல் ஆட்சி நடத்தக்கூடிய முதல்வா்தான் நமது மு.க. ஸ்டாலின் என்றாா் அமைச்சா் .

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com