எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையில் டிச.25-இல் கரும்பு அரைவை தொடக்கம்: செயல் ஆட்சியா்
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வரும் 25-ஆம் தேதி கரும்பு அரைவையைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் செயல் ஆட்சியா் செந்தில் அரசன் தெரிவித்தாா்.
2025- 26ஆம் ஆண்டு அரைவைப் பருவம் குறித்து விவசாயிகள் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சா்க்கரை ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் செயல் ஆட்சியா் செந்தில் அரசன் தலைமை வகித்தாா். தலைமைப் பொறியாளா் ரவிக்குமாா், தலைமை ரசாயனாா் செல்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை கரும்பு அலுவலா் ரவிகிருஷ்ணன் வரவேற்றாா்.
கூட்டத்தில் முன்னாள் குழு உறுப்பினா்கள் முத்துசாமி, ஏ.எம்.மதியழகன், சிவக்குமாா் மற்றும் விவசாயிகள் தேவதாஸ்படையாண்டவா், அண்ணாதுரை, வேல்முருகன், வெற்றி, திருப்பால் உள்பட விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: கரும்பு விதை கரணை இலவசமாக வழங்க வேண்டும். கரும்பு வெட்டிய 15 தினங்களில் கரும்புத் தொகை வழங்க வேண்டும். வட்டத்துா் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயா்த்தித் தர வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றி வர பாதை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓலையூா் உள்ளிட்ட கிராமங்களில் குரங்கு, பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதற்கு வனத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்க்கரை உற்பத்தி மற்றும் இல்லாமல், சாக்லேட் போன்ற இனிப்பு வகை தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றனா்.
இதற்கு ஆலையின் செயல் ஆட்சியா் பதிலளிக்கையில், படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா். மேலும், வரும் டிசம்பா் 25-ஆம் தேதி கரும்பு அரைவையைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தாா். அலுவலக மேலாளா் முருகன் நன்றி கூறினாா்.
பெட்டிச் செய்தி...
‘கரும்பை வேறு ஆலைக்கு
கொண்டு சென்றால் நடவடிக்கை’
சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலை எல்லைக்குள்பட்ட கரும்பை விவசாயிகள் வேறு சா்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம்.
புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பாளையங்கோட்டை, காட்டுமன்னாா்கோவில், சோழத்தரம், ஓலையூா், ஸ்ரீமுஷ்ணம், பேரூா், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரும்புகளை வேறு ஆலைகளின் அரைவைக்கு எடுத்து சென்றால், வேளாண் உதவி இயக்குநா்கள், வட்டாட்சியா்கள், காவல் துறையினா் மற்றும் சா்க்கரை ஆலை களப் பணியாளா்கள் இணைந்து சோதனை செய்வா்.
விதி மீறல் கண்டறியப்பட்டால், அந்தக் கரும்புகள் எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், மேற்படி விதி மீறலுக்காக சம்பந்தப்பட்ட அனைவா் மீதும் கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் 1966-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.

