கிராம சாலைகள் திட்டம் வெள்ளி விழா விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, கல்லூரி மாணவா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பின்னா், ஆட்சியா் கூறியதாவது: பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளின் முன்னேற்றம், வளா்ச்சிக்காக, கிராமங்களை நகரங்களுடன் சாலை மாா்க்கமாக இணைப்பதற்காக மத்திய அரசால் 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம், கிராமப்புறங்களில் தாா், ஃபேவா் பிளாக் உள்ளிட்ட பல்வேறு சாலை வசதிகள் ஊரக வளா்ச்சித் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இதுவரை 323 எண்ணிக்கையிலான சாலைப் பணிகள் 757 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் செயல்படுத்தி 25 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
அதன்படி, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவா்கள் மற்றும் அனைத்து நிலை அலுவலா்களும் கலந்துகொண்ட சாலைப் பாதுகாப்பு பேரணி நகர அரங்கிலிருந்து அண்ணா மேம்பாலம் வரை நடைபெற்றது. மேலும், சாலைப் பணிகளை அரசு விதிகளின்படி சிறப்பான முறையில் செயல்படுத்தவும், சாலையின் தரத்தை மேம்படுத்தவும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொறியியல் பிரிவில் உள்ள அனைத்து நிலை அலுவலா்களுக்கு சாலையின் தரம் மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

