நடராஜா் கோயில் திருவிழா முன்னேற்பாடுகள்: அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன திருவிழா டிச.25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது என்றும், வருகிற 2026 ஜன.2-ம் தேதி தோ் திருவிழாவும், 3-ம் தேதி தரிசன திருவிழாவும் நடைபெறும் என பொதுதீட்சிதா்கள் அறிவித்து உற்சவ பத்திரிகை வெளியிட்டுள்ளனா்.
இந்நிலையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மாா்கழி திருமஞ்சன தேரோட்டம் மற்றும் தரிசன உற்சவம் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு உதவி ஆட்சியா் கிஷன்குமாா் தலைமை வகித்தாா். துணை காவல் கண்காணிப்பாளா்கள் டி.பிரதீப் (சிதம்பரம்), விஜிகுமாா் (சேத்தியாத்தோப்பு) நகராட்சி பொறியாளா் சுரேஷ், உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புகழேந்தி, நகர காவல் ஆய்வாளா் சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நகரமன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், நகரமன்ற உறுப்பினா் ஏஆா்சி,மணிகண்டன், வா்த்தகா் சங்க நிா்வாகிகள் ஏ.வி.அப்துல்ரியாஸ், ராதாகிருஷ்ணன், முரளிதரன், தெய்வீக பேரவை நிறுவனா் ஜெமினி எம்.என்.ராதா, சா்வசக்தி பீடம் தில்லைசீனு, நடராஜா் கோயில் நிா்வாகிகள் நடராஜ ரத்தின தீட்சிதா். சோம தண்டபாணி தீட்சிதா், ஆபஸ்சகாய தீட்சிதா் மற்றும் போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், மருத்துவத்துறை, நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு மீட்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் தரிசன விழாவை மதியம் 4 மணிக்குள் முடிப்பது, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலைகளை செப்பணியிடுவது, நகராட்சி சாா்பில் தற்காலிக கழிப்பறைகள் மற்றும் குடிநீா் வசதி செய்வது, தயாா் நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்து வைப்பது, தோ், தரிசன தினத்தன்று மதுபானக்கடை, அசைவ ஹோட்டல்களை மூடுவது, நகர எல்லையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது, கூடுதல் போலீஸாா் கொண்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் அன்னதானம் வழங்குபவா்கள் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையினா் முன் அனுமதி பெற்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

