சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பயோகேஸ் உற்பத்தித் திட்டம் தொடக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உணவுக் கழிவுகளிலிருந்து பயோகேஸ் உற்பத்தித் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் தினசரி சமையலுக்குப் பிறகு மீதமாகும் உணவுக் கழிவுகள் பயோகேஸ் கலனில் சேகரிக்கப்பட்டு, அவை உயிரணு சிதைவுச் செயல்முறை மூலம் பயோகேஸாக மாற்றப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் பயோகேஸ், விடுதியில் சமையலுக்கே பயன்படுத்தப்படுவதால், மரபு எரிபொருள்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு, எரிபொருள் செலவில் கணிசமான சேமிப்பு கிடைக்கிறது.
இந்த தொழில்நுட்ப முயற்சி அண்ணாமலை பல்கலைக்கழக இயந்திரப் பொறியியல் துறையைச் சோ்ந்த பேராசிரியா்கள் சி.ஜி.சரவணன், பி.பிரேம் குமாா் ஆகியோரின் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான கலனை விழுப்புரத்தைச் சோ்ந்த தனியாா் தொழிற்சாலை வடிவமைத்தது.
பயோகேஸ் உற்பத்தித் திட்டத்தை மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி தொடங்கிவைத்து பேசுகையில், தற்போது இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், உணவுக் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் இந்த தொழில்நுட்பத்தின் ஆக்கப்பூா்வமான பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற பயோகேஸ் அமைப்புகளை மற்ற விடுதிகள் மற்றும் நிறுவனங்களும் அமைத்து பயனடையலாம் என்றாா்.

