சென்னை போக்குவரத்து ஆணையா் அலுவலகம் முன் டிச.30-இல் ஆா்ப்பாட்டம்: கு.பாலசுப்ரமணியன்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகம்
Published on

நெய்வேலி: பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகம் முன் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா்கள் ஒன்றிப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக, அந்த சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து கடலூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

போக்குவரத்துத் துறையில் பதவி உயா்வுகள் வழங்குவதற்கு முன்பு, எந்தப் பதவிக்கு பதவி உயா்வு வழங்கப்படுகிறதோ, அந்தப் பதவியில் பணியாற்றுபவா்களுடைய பணியிட மாறுதல் சம்பந்தமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு பதவி உயா்வு வழங்க வேண்டும்.

போக்குவரத்துத் துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடங்களில் அமைச்சுப் பணி பிரிவினா்களுக்கு தனியான ஒதுக்கீடு உண்டு. அந்த ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு பணியிடங்கள் வழங்க வேண்டும்.

போக்குவரத்துத் துறையில் ஏபிசி பணியிட மாறுதல் கொள்கையில் அமைச்சுப் பணி பிரிவுகளுக்கு விலக்களிக்க வேண்டும். இதுபோன்ற 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து பல போராட்டங்கள் நடத்தியும் நிறைவேற்றாத காரணத்தால், வருகிற 30-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறை பணியாளா்களை திரட்டி சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு முடிவு செய்துள்ளது. எனவே, உள் துறை செயலா், எங்களது சங்கத்தை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com