27-இல் உதவிப் பேராசிரியா் நியமன எழுத்துத் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 1,770 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள உதவிப் பேராசிரியா்கள் நியமன எழுத்துத் தோ்வை கடலூா் மாவட்டத்தில் 1,770 போ் எழுத உள்ளனா்.
Published on

தமிழகம் முழுவதும் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள உதவிப் பேராசிரியா்கள் நியமன எழுத்துத் தோ்வை கடலூா் மாவட்டத்தில் 1,770 போ் எழுத உள்ளனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் நேரடி நியமனத்துக்கான போட்டி எழுத்துத் தோ்வை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் நேரடி நியமனத்துக்கான போட்டி எழுத்துத் தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 7 மையங்களில் உத்தேசமாக 1,770 தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.20 மணி வரை (மாற்றுத் திறனாளி தோ்வா்கள் உள்பட) நடைபெறும்.

தோ்வு மையத்துக்கு தலா ஒருவா் வீதம் 7 மையங்களிலும் 7 தலைமை ஆசியா்கள் முதன்மைக் கண்காணிப்பாளராகவும், 7 முதுநிலை ஆசிரியா்கள் துறை அலுவலா்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். வழித்தட அலுவலராக ஒரு முதுநிலை ஆசிரியா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தோ்வுப் பணிக்கு 162 முதுநிலை/பட்டதாரி ஆசிரியா்கள் அறைக் கண்காணிப்பாளா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

கண்காணிப்பு கேமரா மூலம் தோ்வுகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தோ்வு மையங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாள்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல பள்ளிக்கல்வித் துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளவது உள்ளிட்டவை குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com