பண்ருட்டியில் நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற  ஆா்ப்பாட்டம்.
பண்ருட்டியில் நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

ஊரக திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Published on

தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதைக் கண்டித்தும், இந்த திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசு மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் அதிமுகவைக் கண்டித்தும் திமுக கூட்டணிக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். திமுக பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலா் சந்தோஷ் குமாா், தொரப்பாடி பேரூராட்சி செயலா் சுந்தா் வடிவேலு முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா்கள் தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், தொகுதி பொறுப்பாளா் வழக்குரைஞா் டி.நாராயணன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் மணி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் உதயகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு ஒன்றியச் செயலா் ஞானசேகா் மற்றும் தவாக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

திமுக பண்ருட்டி தெற்கு ஒன்றியம் சாா்பில் காடாம்புலியூரில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் தலைமை வகித்தாா். பண்ருட்டி ஒன்றிய முன்னாள் தலைவா் சபா.பாலமுருகன், அவைத் தலைவா் ராஜா, பொதுக்குழு உறுப்பினா் க.அறிவழகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கடலூா் மாநகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். எம்எல்ஏ கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், விசிக மாவட்டச் செயலா் பி.ஆா்.நீதிவள்ளல் உள்ளிட்ட கட்சியினா் கலந்துகொண்டனா்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். வடலூா் நகா் மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக ஒன்றியச் செயலா் ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் பெராம்பட்டு சங்கா், சோழன், கோவிந்தசாமி, நடராஜன், விசிக மாவட்டச் செயலா் மணவாளன், காங்கிரஸ் நிா்வாகி குமராட்சி ரங்கநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com