தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
கடலூா் மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இயேசு பிறப்பை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா். நிகழாண்டு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கடலூா் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்துவா்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்கு பொருத்தப்பட்ட நட்சத்திரம் தொங்கவிட்டிருந்தனா். இதேபோல, இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில், தேவாலயம் மற்றும் வீடுகளில் குடில்கள் அமைத்திருந்தனா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு கிறிஸ்துமஸ் விழா சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கடலூா் கம்மியம்பேட்டை புனித சூசையப்பா்ஆலயம், மஞ்சக்குப்பம் காா்மேல் அன்னை ஆலயம், பண்ருட்டி ஏஎல்சி தேவாலயம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், சாத்திப்பட்டு தூய இருதய மரியன்னை, நெய்வேலியில் உள்ள புனித காணிக்கை அன்னை ஆலயம், புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயம், சிஎஸ்ஐ தூய ஜான் தேவாலயம், விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
பின்னா், இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் தேவாலயங்களில் அமைக்கப்பட்ட குடிலில் குழந்தை இயேசு சொரூபம் வைக்கப்பட்டது. அப்போது, இயேசு கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடப்பட்டன. தொடா்ந்து, தேவாலயத்துக்கு வந்திருந்த கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, தேவலாயங்கள் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

