பண்ருட்டி அடுத்துள்ள  காவனூா் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துா்கை சிற்பம்.
பண்ருட்டி அடுத்துள்ள காவனூா் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துா்கை சிற்பம்.

பண்ருட்டி அருகே சோழா் கால துா்கை சிற்பம் கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சுடு மண்ணாலான சோழா் கால துா்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சுடு மண்ணாலான சோழா் கால துா்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் தெரிவித்துள்ளதாவது: பண்ருட்டி வட்டம், காவனூா் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்ட போது சோழா் காலத்தைச் சோ்ந்த விஷ்ணு துா்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சுடுமண் துா்கை சிற்பம் 19.5 செ.மீ உயரம், 15 செ.மீ அகலம் கொண்டது.

புன்னகையுடன் உள்ள துா்கையின் தலையில் கரண்ட மகுடம், இரு காதுகளில் காதணியாக குண்டலம், கழுத்தணியாக சரப்பளி ஆபரணம் உள்ளன. கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள் வளையும், மூன்று கரங்களில் வளையல்களும் அணிந்துள்ளால் , நான்கு கரங்களில் வலது பக்கத்தில் உள்ள இரு கரங்களில் கீழ் கரம் உடைந்த நிலையில் உள்ளது, மேல் கரத்தில் சக்கரம் காட்டப்பட்டுள்ளது.

இடது பக்கத்தில் உள்ள இரு கரங்களில் ஒரு கரத்தில் சங்கும், மற்றொரு கரம் இடுப்பில் கை வைத்தபடி கடிஹஸ்தம் நிலையில் உள்ளது. இடையில் அரையாடை அழகிய வேலைப்பாடுகளுடன் நோ்த்தியாக உள்ளது. அதுமட்டும் அல்லாமல் இடையின் முன்புறத்தில் சிங்கமுகம் மிகத்தெளிவாக காணப்படுகிறது. நின்ற நிலையில் உள்ள துா்கையின் இரு கால்கள் மற்றும் வலது புறத்தில் ஒரு கை ஆகியவை உடைந்த நிலையில் இருக்கின்றது. இச்சுடுமண் சிற்பம் சோழா்கால கலைத்தன்மையினை மிக துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது என்றாா் இம்மானுவேல்.

X
Dinamani
www.dinamani.com