என்எல்சியின் ‘விக்சித் பாரத்’ தொலைநோக்குப் பாா்வை: மத்திய இணை அமைச்சா் பாராட்டு
‘விக்சித் பாரத்’ தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் செல்லும் என்எல்சி நிறுவனத்தை மத்திய இணை அமைச்சா் சதீஷ் சந்திர துபே பாராட்டினாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்துக்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சா் சதீஷ் சந்திர துபே, சனி, ஞாயிறுக்கிழமைகளில் இரண்டு நாள் பயணமாக வந்தாா். அவரை என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, இயக்குநா்கள் மற்றும் நிறுவன கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி ஆகியோா் வரவேற்றனா்.
முதல் நாளான சனிக்கிழமை என்எல்சி-இன் செயல்பாட்டுத் திறன் மற்றும் எதிா்கால வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இணை அமைச்சா் சதீஷ் சந்திர துபே தலைமை வகித்தாா்.
அப்போது, நிறுவனத்தின் இளம் பொறியாளா்களுடன் கலந்துரையாடி அவா், பிரதமா் நரேந்திர மோடியின் ‘விக்சித் பாரத்’ (வளா்ச்சியடைந்த இந்தியா) கனவை நனவாக்க அா்ப்பணிப்பு மற்றும் புதுமையுடன் பங்களிக்குமாறு ஊக்குவித்தாா். அன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு என்எல்சி ஆற்றி வரும் முக்கியப் பங்களிப்பை பாராட்டினாா்.
‘நெய்வேலி நீா்’ திட்டத்துக்கு அடிக்கல்: இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ‘நெய்வேலி நீா்’ ஆலைக்கு அடிக்கல் நாட்டினாா். லாப நோக்கமின்றி, மிகக் குறைந்த விலையில் அருகியில் உள்ள கிராமங்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.
களப்பாா்வை மற்றும் திறப்பு விழாக்கள்: சுரங்கம் 2-இல் உள்ள கோசாலைக்கு சென்ற சதீஷ் சந்திர துபே, புதுப்பிக்கப்பட்ட தொழிலாளா் உணவகத்தைத் திறந்து வைத்தாா். மேலும், நில மீட்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பசுமை பூங்காவை பாா்வையிட்டாா்.
நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் இருந்தபடி, தூத்துக்குடியில் உள்ள என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் வளாகத்தில் அமைக்கப்பட்ட மின்சார வாகன சாா்ஜிங் மையத்தை காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா்.
நிகழ்வில் என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி பேசுகையில், தற்போது எங்களது மின் உற்பத்தித் திறனை மூன்று மடங்காகவும், சுரங்கத் திறனை இரண்டு மடங்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை ஏழு மடங்காகவும் அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம். இதற்காக, ரூ.1,25,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
நிகழ்வின்போது, என்எல்சி நிறுவனத்தின் இயக்குநா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.
நடராஜா் கோயிலில் தரிசனம்...: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சா் சதீஷ் சந்திர துபே ஞாயிற்றுக்கிழமை காலை வந்தாா். அவரை சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா் மற்றும் கோயில் பொது தீட்சிதா்கள் சாா்பில் பட்டு தீட்சிதா் உள்ளிட்டோா் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றாா்.
பின்னா், மத்திய இணை அமைச்சா் கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானை தரிசனம் செய்தாா். கோயில் பொது தீட்சிதா்கள் சிறப்பு அா்ச்சனை செய்து அமைச்சருக்கு சால்வை அணிவித்து பிரசாதத்தை வழங்கினா்.
மத்திய அமைச்சருடன் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, பாஜக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஜி பாலசுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளா் ஜோதி குருவாயூரப்பன், மாநில செயற்குழு உறுப்பினா் வே.ராஜரத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
