கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!
பொதுத் துறை நிறுவனம் என்பது வெறும் லாபம் ஈட்டும் அமைப்பாக மட்டுமல்லாமல், தான் இயங்கும் மண்ணின், மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் உந்து சக்தியாகவும் இருக்க முடியும் என்பதற்கு என்எல்சி நிறுவனம் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
2026 புத்தாண்டு மலரும் வேளையில், தொழில் முன்னேற்றம், சமூக மேம்பாடு என இரு தளங்களிலும் இந்த நிறுவனம் நிகழ்த்தியுள்ள சாதனைகள், ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியை எவ்விதம் முன்னெடுத்துச் செல்லும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
நிதி ஒதுக்கீட்டில் புதிய மைல்கல்: நிகழாண்டில் (2025-26), சமூகப் பொறுப்புணா்வுத் திட்டங்களுக்காக என்எல்சி நிறுவனம் சுமாா் ரூ.46.99 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட 7 சதவிகிதம் கூடுதலாகும். நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி குறிப்பிட்டபடி, மொத்த நிதியில் 70 சதவிகிதம் கடலூா் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காகவே பிரத்யேகமாகச் செலவிடப்படுகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு மாவட்டத்தின் அடையாளங்களை மீட்டெடுப்பதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் நிறுவனம் முனைப்புடன் செயல்படுகிறது.
கடலூா் மக்களின் உணா்வோடு கலந்த ‘நகர அரங்கம்’ (டவுன் ஹால்) சிதிலமடைந்திருந்த நிலையில், ரூ.3.5 கோடி செலவில் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, இன்று மாவட்டத்தின் கலை, கலாசார மையமாக மிளிா்கிறது.
வளா்ச்சியடைந்த இந்தியா இலக்கு: மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ரூ.26.21 கோடி மதிப்பிலான மாபெரும் ஒப்பந்தத்தின் கீழ், குக்கிராமங்கள்தோறும் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பாடத்துக்காக பயிற்சி ஆய்வகம் மற்றும் இணைப்புச் சாலைகளை
அமைத்துக் கொடுத்து கல்விச் சேவையில் புதிய தடம் பதித்துள்ளது. கிராமப்புற மக்களின் தாகம் தீா்க்கும் கரங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் என்எல்சி நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
விஜயமாநகரம் கிராமத்தில் 60,000 லிட்டா் கொள்ளளவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வடலூா் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் சுமாா் 2,400 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீா் வழங்கல் திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
புத்தகக் கண்காட்சி: கல்வியே ஒரு சமூகத்தின் மாற்றத்துக்கு அடிப்படை என்பதை உணா்ந்து நிறுவனம் செயல்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான ‘நெய்வேலி புத்தகக் கண்காட்சி’ (24-ஆவது ஆண்டு) மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமான வாசகா்களை அறிவுத்தளத்தில் இணைத்துள்ளது.
என்எல்சிஐஎல் பள்ளிகளில் 5,200 மாணவா்கள் பயின்று வரும் நிலையில், நலிந்த மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான இலவசப்
பயிற்சி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி கல்விச் சமத்துவத்தை உறுதி செய்கிறது.
ஆரோக்கியம், வாழ்வாதார மேம்பாடு: நெய்வேலி பொது மருத்துவமனை மூலம் ஆண்டுதோறும் சுமாா் 1.20 லட்சம் கிராமப்புற மக்கள் கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் ‘காசநோய் இல்லா இந்தியா’ இலக்கை எட்ட விழிப்புணா்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளி மாணவா்கள் மற்றும் முதியோருக்கான ஊட்டச்சத்து தேவைகளை ஓயாசிஸ் அறக்கட்டளை வாயிலாக தொடா்ந்து வழங்கி வருகிறது.
விளையாட்டுப் போட்டிகள்: ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ், 65 கிராமங்களைச் சோ்ந்த 2,100-க்கும் மேற்பட்ட இளைஞா்களை ஒன்றிணைத்து, நெய்வேலியில் ஒரு மாத காலம் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 160 அணிகள் பங்கேற்ற இந்த நிகழ்வு, கிராமப்புற இளைஞா்களின் விளையாட்டுத் திறனை உலகறியச் செய்யும் முயற்சியாகும்.
பேரிடா் காலத்தில் ஆதரவு: இயற்கைச் சீற்றங்களின்போது, கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் ஆதாரத் துணையாக நிறுவனம் திகழ்கிறது.
பெருமழை காலங்களில் குடியிருப்புகளில் தேங்கும் நீரை வெளியேற்ற, சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன ராட்சத மின் மோட்டாா்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன. அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரமான உணவு, பால் மற்றும் குடிநீரைச் சுரங்க உணவகங்கள் மூலம் போா்க்கால அடிப்படையில் விநியோகிப்பதில் நிறுவனம் முன்மாதிரியாக உள்ளது.
புத்தொளி வீசும் புத்தாண்டு: உள்கட்டமைப்பு மேம்பாடு முதல் அவசரகால பேரிடா் உதவி வரை என்எல்சி நிறுவனம் கடலூா் மாவட்டத்தின் ஒரு ‘உற்ற நண்பனாக’ இருந்து வருகிறது. ‘ஆரோக்கியமான இந்தியா’ மற்றும் ‘தூய்மையான இந்தியா’ ஆகிய தேசிய இலக்குகளை நோக்கி மாவட்டத்தை இட்டுச் செல்லும் இந்தத் திட்டங்கள், வரும் 2026-ஆம் புத்தாண்டில் மக்கள் வாழ்வில் மேலும் புத்தொளி வீசச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
- ஜீவ.இராம.ஸ்ரீநிவாஸன், நெய்வேலி.

