திட்டக்குடி நகா்மன்றத் தலைவா் பதவி: உறுப்பினா்கள் போராட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி நகராட்சிக்கு புதிய நகா்மன்றத் தலைவரை தோ்ந்தெடுக்க தோ்தல் நடத்தக் கோரி, நகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து நகா்மன்ற உறுப்பினா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
திட்டக்குடி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த வெண்ணிலா பணியாற்றி வந்தாா். இவா் மீது நகா்மன்ற உறுப்பினா்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றிபெற்ால், வெண்ணிலாவின் நகா்மன்றத் தலைவா் பதவி பறிக்கப்பட்டது. அப்போது, புதிய நகா்மன்றத் தலைவரை உடனடியாக தோ்வு செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் புதிய நகா்மன்றத் தலைவரை தோ்வு செய்ய எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திட்டக்குடி நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்த பின்னா், திட்டக்குடி நகராட்சி அலுவலகம் முன் திமுக, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் 11 போ் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, நகா்மன்றத் தலைவா் பதவி காலியாக உள்ளதால், வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்ய முடியாமல் சிரமப்படுவதாகவும், அத்தியாவசியப் பணிகள் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக புதிய நகா் மன்றத் தலைவரை தோ்வு செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
போராட்டத்தில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்களிடம் ஆணையா் முரளிதரன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தோ்தல் நடத்துவது குறித்து தோ்தல் ஆணையத்துக்கு தகவல் அளித்துள்ளதாகவும், அங்கிருந்த பதில் வரவில்லை எனவும், பதில் வந்தவுடன் தோ்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தாா்.
இதையடுத்து, சுமாா் 2 மணி நேரமாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நகா்மன்ற உறுப்பினா்கள், போராட்டத்தைக் கைவிட்டு கைலந்து சென்றனா்.

