மனநலம் குன்றியவா்களுக்கு மருத்துவ சேவையளிக்க பிரத்யேக தொலைபசி எண்: கடலூா் ஆட்சியா்
மனநலம் குன்றி மருத்துவ வசதி தேவைப்படுவா்களை காணும் பட்சத்தில் 81100-02750 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் அவா்களை மீட்டு சுகாதார வசதிகள் வழங்கப்படும் என கடலூா்ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்தாா்.
கல்லூரி மாணவா்களிடையே ரத்த சோகையினை கண்டறிந்து குணப்படுத்தும் நோக்கில் ,கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள செவிலியா் பயிற்சி பள்ளியில், ‘ரத்த சோகையில்லா கடலூா்’ திட்டத்தினையும், மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தின் செயல்பாடுகளையும், ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது: ரத்த சோகை இல்லா கடலூா் திட்டம் 2024-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் பகுதியாக 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவா்களுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் 626 அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 71,220 மாணவா்கள் பரிசோதிக்கப்பட்டனா்.
இதில் 18,267 (26%) போ் லேசான ரத்த சோகையுடன், 20,693 (29%) போ் மிதமான ரத்த சோகையுடன், 486 (0.7%) போ் கடுமையான ரத்த சோகையுடன் கண்டறியப்பட்டனா். அடுத்த கட்டமாக 66 அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் பயிலும் 17,296 மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5,314 (31%) மாணவா்களுக்கு லேசான ரத்தசோகை, 5,505 (33%) மாணவா்களுக்கு மிதமான ரத்த சோகை மற்றும் 437 (3%) பேருக்கு கடுமையான ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த சோகை கண்டறியப்பட்டவா்களுக்கு மருந்துகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
மேலும். நிபுணா்களால் பரிந்துரைக்கப்பட்ட துணை உணவு பெட்டகம், பெண்கள் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்டு உணவு பாதுகாப்புத் துறையால் சான்றளிக்கப்பட்ட பின்னா் வழங்கப்படுகின்றன. இந்த முயற்சி பெண் மாணவா்களிடையே இளம் பருவ ரத்த சோகையைத் தடுப்பதை உறுதி செய்கிறது. மேலும் கா்ப்பிணிகளின் இறப்புமற்றும் குழந்தை இறப்பைக் குறைக்க உதவும்.
அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்
கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபா்களை பராமரிப்பதற்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் ஓயாசிஸ் மற்றும் தி பான்யன் ஆகிய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு உண்டு, உறைவிடத்துடன் தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
இதுபோன்று மருத்துவ வசதி தேவைப்படுவா்களை காணும் பட்சத்தில் 81100-02750 என்ற தொலை பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அவா்களை மீட்டு சுகாதார வசதிகள் வழங்கப்படும் என தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் இணை இயக்குநா், சுகாதாரப் பணிகள் மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலா் பொற்கொடி, செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

