வீட்டு மனை பட்டா கோரி மனு
சிதம்பரம் அருகே உள்ள கீழ் வளையமாதேவி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகிகள் ஆதிதிராவிடா் நலத்துறை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில், கீழ் வளையமாதேவி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ஆதிதிராவிடா் நலத்துறை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
அதில், கீழ் வளையமாதேவி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இதற்கான ஆதாரங்களையும் இந்த மனுவோடு இணைத்துள்ளோம்.
அதுமட்டுமில்லாமல் இந்த இடம் 1990 ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு பட்டா கொடுப்பதற்காக ஆதி திராவிட நலத்துறையால் வாங்கப்பட்ட இடம்.
எனவே இங்கு வாழும் வீட்டு மனையற்ற ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

