மனைவி உயிரிழப்பு: கணவா் தற்கொலை முயற்சி

பண்ருட்டி அருகே மனைவி உயிரிழந்த நிலையில், கணவா் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவி உயிரிழந்த நிலையில், கணவா் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அடுத்துள்ள ஆமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி(63). இவா், பண்ருட்டி அடுத்துள்ள கொக்குப்பாளையம் பகுதியில் கொய்யா தோப்பு குத்தகை எடுத்து , தோப்பில் உள்ள வீட்டில் மனைவி பாஞ்சாலி(55) உடன் வசித்து வந்தாா்.

திங்கள்கிழமை காலை வெகு நேரமாகியும் இவா்களது வீடு திறக்கப்படவில்லை. அப்பகுதியில் இருந்தவா்கள் வீட்டை திறந்து பாா்த்த போது, பாஞ்சாலி இறந்து கிடந்தாா். அதே இடத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் பழனி ஆபாத்தான நிலையில் கிடந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் பழனியை மீட்டு சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பாஞ்சாலியின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாஞ்சாலி எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com