

கடலூர்: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த சனிக்கிழமை விடுதலையான 23 வயது இளைஞரான சுந்தரவேல், திங்கள்கிழமை(ஜூன் 16) மாலை பண்ருட்டி அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தார். சம்பவத்தன்று அந்த இளைஞர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்த (80) வயது மூதாட்டி கௌசல்யா தனது மகனுடன் வசித்து வருகிறார். மூதாட்டி தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் புலவனூர் சாலையில் தனியாக நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.
நேற்று(ஜூன் 16) மாலை கௌசல்யா வழக்கம்போல புலவனூர் சாலையில் நடை பயிற்சி செய்தபோது, அங்கே சாலை ஓரத்தில் அமர்ந்திருந்து மது குடித்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் மூதாட்டியை வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து இழுத்துச் சென்று அருகேயுள்ள சவுக்கு தோப்பிற்குள் வைத்து மூதாட்டியை கடுமையாக தாக்கி, சத்தம் போட முடியாத வகையில் அவரது வாயில் மண்ணை கொட்டிவிட்டு மூதாட்டி அணிந்திருந்த உடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அத்துடன் மூதாட்டி காது, மூக்கில் அணிந்திருந்த நகைகளை அறுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலறிந்த உடனே, சம்பவ இடத்திற்கு நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கைரேகை நிபுணர்கள் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியும் நடைபெற்றது.
மேலும், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்த நிலையில், குற்றவாளிகளுள் ஒருவரான பண்ருட்டியை அடுத்த எஸ்கே பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரவேல் காடாம்புலியூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்த தகவலறிந்த உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குற்றவாளியை பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளர் வேலுமணி, காவலர்கள் குபேந்திரன், ஹரிஹரன் ஆகிய காவல்துறை அதிகாரிகளை போதையில் இருந்த அந்த வாலிபர் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் அவர்களை தாக்கியும் உள்ளார். இதையடுத்து, அந்த வாலிபரை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தரவேலுக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு தேவையான மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்பொழுது மூதாட்டி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.