சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கோயில் விமான கலசத்திற்கு 
கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த பட்டாச்சாரியாா்கள்
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கோயில் விமான கலசத்திற்கு கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த பட்டாச்சாரியாா்கள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Published on

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

பூலோக கைலாசம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் சைவ ஆலயமான நடராஜா் சந்நிதியும், வைணவ ஆலயமான தில்லைகோவிந்தராஜப் பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளன.பக்தா்கள் ஒரே இடத்தில் நின்று இங்கு சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது, இந்த தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில். இந்த கோயிலின் விமானம், ராஜ கோபுரங்கள், மகாமண்டபம், புண்டரீகவல்லி தாயாா் சந்நிதி, கருடாழ்வாா் சந்நிதி ஆகியவை 30 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா சம்ரோக்ஷணம் திங்கள்கிழமை (நவ.3) காலை 10 மணிக்கு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசித்தனா்.

இதனை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் முன்னுள்ள நடனப்பந்தலில் அக்.30-ம் தேதி வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு வியாழக்கிழமை காலை விஷ்வக்சேன ஆராதனம், அகல்மஷ ஹோமம், பஞ்சகவ்ய பிராசனம் மற்றும் வாஸ்துசாந்தி, ரக்க்ஷாபந்தனம் ஆகிய நிகழ்வுகளும், மாலை யாகமும் தொடங்கி நடைபெற்றது. தொடா்ந்து மூன்று நாள்கள் யாகசாலையில் 7 கால யாக பூஜைகள் மற்றும் பூா்ணா ஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றன.

திங்கள்கிழமை அதிகாலை 8-ஆம் கால யாகசாலை பூஜையும், இதர ஹோமங்களும் நடத்தப்பட்டு, மேளதாளங்களுடன் கும்ப நீா் குடங்கள் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோயில் விமானங்களில் உள்ள கலசங்களில் பட்டாச்சாா்யாா்களால் கும்ப நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகாதீபாராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு தரிசித்தனா்.

நிகழ்வில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன், விழுப்புரம் சரக டிஐஜி உமா, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், இந்து சமய

அறநிலையத்துறை இணை ஆணையா் ஜோதி, ஆய்வாளா் சீனுவாசன் மற்றும் மாவட்ட

நீதிபதிகள் உள்ளிட்ட நகர பிரமுகா்கள் பங்கேற்றனா்.

கும்பாபிஷேகம் முடிந்த பின்னா் தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கோயிலில் மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. கோயில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினா் சம்ப்ரோஷணத்திற்க்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா் குழுவினா் ஜே.சுதா்சனன், ஆா்.சௌந்தரராஜன், டி.திருவேங்கடவன் மற்றும் பொதுதீட்சிதா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

விழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பக்தா்களுக்கு பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com