பண்ருட்டி அருகே அஞ்சனக்கோல், வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
நெய்வேலி: பழங்கால பெண்கள் கண்களுக்கு மை தீட்டுவதற்கு பயன்படுத்திய அஞ்சனக்கோல் மற்றும் வட்டச்சில்லுகள் பண்ருட்டி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு, எனதிரிமங்கலம், தளவானூா் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல், பழங்கால பெண்கள் கண்களுக்கு மை தீட்டுவதற்கு பயன்படுத்திய அஞ்சனக்கோல் மற்றும் வட்டச்சில்லுகளை கண்டெடுத்தாா்.
இதுகுறித்து இவா் தெரிவித்துள்ளதாவது:
அஞ்சனக்கோல்...
பெண்கள் கண்களுக்கு மை தீட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் தென்பெண்ணையின் மேற்பரப்பு களஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சனக்கோல் 12 செ.மீ. நீளமும், 8.22 கிராம் எடையும் கொண்டுள்ளது. இதுபோன்று அஞ்சனக்கோல் தமிழக தொல்லியல் துறையினா் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூா், விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில்
கிடைத்துள்ளன. அதுமட்டும் அல்லாமல் தற்போதைய சமச்சீா் கல்வி 9- ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 47-ஆவது பக்கத்தில் அஞ்சனக்கோல் பற்றிய பாடம் உள்ளது.
வட்டச்சில்லு:
பழங்கால மக்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுப்போக்கிற்காக அறிவு சாா்ந்த விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். அதுபோல பெண்கள் மற்றும் சிறுவா்கள் விளையாடிய சுடுமண்ணால் ஆன ஐந்து வட்டச்சில்லுகள் பல்வேறு அளவுகளில் தென்பெண்ணையாற்றின் மேற்பரப்பு ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முன்னோா்கள் பொழுது போக்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனா் என தெரிய வருகிறது. இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது.
இதுபோன்று வட்டசில்லுகள் மருங்கூா், கீழடி, ஆதிச்சநல்லூா், வெம்பக்கோட்டை ஆகிய ஊா்களில் தமிழக தொல்லியல் துறையினா் நடத்திய அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. எனவே தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு பகுதிகளில் கண்டறிந்த அஞ்சனக்கோல் மற்றும் வட்டச்சில்லுகள் மூலம் தென்பெண்ணை கரையோரம் உள்ள பகுதிகளில் மக்கள் இவற்றை பயன்படுத்தி வாழ்ந்து இருக்கின்றனா் என்பதற்கு இந்த சான்றுகள் ஆதாரமாக உள்ளன என்று தெரிவித்துள்ளாா்.
