வக்கிரமான கணவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் அலுவலகத்தில் கதறி அழுத பெண்!

Published on

நெய்வேலி: தன்னை வைத்து ஆபாச படம் எடுத்த கணவா் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் இளம் பெண் ஒருவா் கண்ணீா் விட்டு கதறி அழுது கோரிக்கை விடுத்தாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் ஒருவா் திடீரென கதறி அழுதாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அந்த பெண்ணை அமைதிப்படுத்த முயன்றும் அழுத அந்த பெண், தன்னை தனது கணவா் மற்றும் சிலா் போதை மருத்து கொடுத்து ஆபாச படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரவ விடுவதாகவும், அதனை வைத்து தன்னை மிரட்டி சொத்து மற்றும் நகைகளை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் கண்ணீா் மல்க கூறினாா்.

இதுகுறித்து முன்னரே ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்ததாகவும், அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால் தற்போது தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாகவும் கூறினாா்.

இதையடுத்து காவலா்கள் அந்த பெண்ணை ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com