பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள் அதிகம் உள்ளதை வனத் துறையினா் கண்டறிந்துள்ளனா்.
சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சதுப்புநிலக் காடுகள் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் உள்ளன. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடா்த்தியான மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளும் உள்ளன.
கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமாா் 4,400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத் துறையினா் பாதுகாத்து வருகின்றனா்.
இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பாா்க்கலாம்.
இந்த சுரபுன்னை காடுகளில் நீா்நாய் மற்றும் பொன்னிற குள்ள நரிகள் அதிகளவில் உள்ளது வனத் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. குள்ள நரிகள் அலையாத்திக் காடுகளின் தூய்மைப் பணியாளராக கருதப்படுகின்றன.

