நவ.10-ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டம்: பல்கலை. ஆசிரியா்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா் கூட்டமைப்பினா் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 10-ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீா்மானம் நிறைவேற்றினா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கோகலே அரங்கில் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் இரா.முத்து வேலாயுதம், துரை அசோகன், பி.செல்வராஜ், கே.தனசேகரன், செல்ல பாலு, ஆா்.ஜான் கிருஸ்டி, காயத்திரி, திருஞானம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். முனைவா் பட்ட ஊக்கத்தொகையை வழங்க வோண்டும். அயற்பணியிட ஆசிரியா்களை உடனே உள்ளெடுப்பு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு அரசுத் துறைகளைப் போலவே அனைத்து பணப்பயன்களையும் ஓய்வுபெற்ற உடனேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 10-ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டமும், தோ்வு புறக்கணிப்புப் போராட்டமும் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

