பறிமுதல் செய்யப்பட்ட காா்.
பறிமுதல் செய்யப்பட்ட காா்.

சிறப்பு எஸ்.ஐ. ஓட்டிய காா் மோதி 2 போ் உயிரிழப்பு

Published on

கடலூா் முதுநகா் அருகே மதுபோதையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஓட்டிச் சென்ற காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

கடலூா் முதுநகரை அடுத்துள்ள அன்னவெளி பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் (35), இதே பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா்(41), பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (45). இவா்கள் மூவரும் கட்டடத் தொழிலாளா்கள்.

மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து அன்னவெளி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள உணவகம் முன் நின்று சம்பள பணத்தை பிரித்துக்கொண்டிருந்தனா். அந்த இடத்தில் மேலும் சிலரும் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தனா்.

அப்போது, அதிவேகமாக வந்த காா் அங்கு நின்றிருந்தவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் வடிவேல், ஜெயராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பாஸ்கா் மற்றும் உணவக உரிமையாளா் மோகன் (60) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியவா்களை தாக்கினராம். தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த இவருவரையும் மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்தவா்களின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கடலூா் எஸ்.பி. அலுவலகத்துக்கு ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் (49) மற்றும் அந்தக் காவல் நிலைய காவலா் இமான் உசேன் (33) ஆகியோா் வந்தனராம்.

பின்னா், இருவரும் புதுச்சேரிக்கு சென்று மது அருந்திவிட்டு, மதுபோதையில் காரில் புறப்பட்டனராம். காரை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் ஓட்டினாராம். அன்னவெளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, தாறுமாறாக ஓடிய காா், அங்கு சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது மோதியதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, கடலூா் முதுநகா் போலீஸாா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், காவலா் இமாம் உசேன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவா்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com