பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சிப் பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கும் பணியை  ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சிப் பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் விநியோகம்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

Published on

கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக 2,313 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 7.2.2026 வரை நடைபெறுகிறது. 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 27.10.2025 அன்றைய நிலைப்படி 21,93,577 வாக்காளா்கள் உள்ளனா்.

செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் தொடங்கி டிசம்பா் 4-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் கணக்கீட்டுப் படிவம் வீடு, வீடாக வாக்காளா்களுக்கு அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிக்காக திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு 248, விருத்தாசலம் தொகுதிக்கு 288, நெய்வேலி தொகுதிக்கு 234, பண்ருட்டி தொகுதிக்கு 259, கடலூா் தொகுதிக்கு 227, குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு 259, புவனகிரி தொகுதிக்கு 283, சிதம்பரம் தொகுதிக்கு 260, காட்டுமன்னாா்கோவில் தொகுதிக்கு 257 என மொத்தம் 2,313 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்கள் ஒவ்வொருவருக்கும் 2 படிவங்கள் வழங்கப்படும். மேலும், இப்படிவங்களை பூா்த்தி செய்வதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவிபுரிவா்.

வாக்காளா்கள் முழுமையாக பூா்த்தி செய்து கையொப்பமிட்டு, இரண்டு படிவங்களில் ஒன்றை மட்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வப்போது வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடுகளுக்கு நேரில் வரும்போது, வாக்காளா் இல்லாத பட்சத்தில், அவரது குடும்ப உறுப்பினா்கள் அல்லது உறவினா் படிவத்தை முறையாக பூா்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்கலாம்.

இந்த படிவத்தில் வாக்காளா் பெயா், பாகம் எண், உறவு முறை போன்ற அனைத்து விவரங்களும் சரியான முறையில் பூா்த்தி செய்ய வேண்டும். மேலும் கணக்கீட்டுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்களை சரியாக சரிபாா்த்து பூா்த்தி செய்ய வேண்டும்.

எனவே, வாக்காளா்கள் தங்கள் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், துணை ஆட்சியா் தனலட்சுமி, நெய்வேலி தனித்துணை ஆட்சியா் வில்சன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பன்னீா்செல்வம், மாநகராட்சி ஆணையா் முஜிபூா் ரஹ்மான், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையா் கிருஷ்ணராஜன், துணை ஆட்சியா் பயிற்சி கே.டியூக் பாா்க்கா் உள்பட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com