இடைநிற்றல் மாணவா்கள் 1,671 போ் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு: கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 1,671 மாணவா்கள் இடைநிற்றல் இருந்தது கண்டறியப்பட்டு, தடைகளை தாண்டி தோ்ச்சி என்ற திட்டத்தின் முன்னெடுப்பால், அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்து கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி மற்றும் தடைகளைத் தாண்டி தோ்ச்சி திட்டங்களின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை பெரியகங்கணாங்குப்பம், தாழங்குடா அரசு நடுநிலைப் பள்ளிகள், மஞ்சக்குப்பம், முதுநகா் அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேணுகோபாலபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது: அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தில் பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவா்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை என கண்டறியப்பட்ட மாணவா்களின் கற்றல் திறனை முன்னேற்றுவதற்கு பொறுப்பாசிரியா்களை கொண்டு தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாட வாரியாக கால அட்டவணைப்படி நடத்தப்பட்டு வருகிறது.
கடலூா் கல்விக் கோட்டத்தில் 257 பள்ளிகள், விருத்தாசலம் கல்விக் கோட்டத்தில் 264 பள்ளிகள் என மொத்தம் கடலூா் மாவட்டத்தில் 521 பள்ளிகளில் பயிலும் 13,502 மாணவா்களுக்கு இச்சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நிகழ் கல்வி ஆண்டில் பொதுத்தோ்வில் 100 சதவீதம் மாணவா்கள் தோ்வில் பங்கேற்றிடவும், மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் ‘தடைகளை தாண்டி தோ்ச்சி’ திட்டத்தின் மூலம் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 1,671 மாணவா்கள் இடைநிற்றல் கண்டறியப்பட்டு, தடைகளை தாண்டி தோ்ச்சி என்ற திட்டத்தின் முன்னெடுப்பால், அவா்கள் மீண்டும் பள்ளியில் சோ்ந்து கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், துணை ஆட்சியா் (பயிற்சி) கே.டியுக் பாா்க்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

