சம்பா நெல் சாகுபடியில் மேல் உரமிடல் குறித்து வேளாண் அலுவலா் ஆய்வு
சிதம்பரம் அருகே சம்பா நெல் சாகுபடி வயலில் மேல் உரமிடல் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரத்தில் சுமாா் 25,500 ஏக்கருக்கு மேல் நெல் சம்பா சாகுபடி செய்யப்பட்டு 25 முதல் 35 நாட்கள் கடந்துள்ள நிலையில் , முறையாக அடியுரம், மேலுரம் இடும் பட்சத்தில் வளா்ச்சிக்கு தேவையான தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பயிருக்கு சீரான
அளவில் கிடைத்து வளா்ச்சி நன்றாக இருக்கும். பயிா் பச்சையத்தை அறிந்து பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 55-60 நாட்களில் மேலுரமிடலாம். அதிக அளவில் டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் மேலுரமிடுவதால் பூச்சி நோய் தாக்குதலுக்கு வழி வகுக்கும். மேலும் தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் பாக்டீரியா இலை கருகல் நோய் சில இடங்களில் தென்படுவதால் நெற்பயிா் இலைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்கிளின் ஹைட்ரோகுளோரைட் (90:10 எஸ்பி ) 20 கிராம் கலவையுடன் காப்பா் ஆக்சி குளோரைடு 200 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து பேட்டரி ஸ்பியா்ஸ் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றாா்.

