தொழில் கல்வி ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு
தமிழக மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியா்கள் தடையின்மை கடிதம் வேண்டி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
தமிழக அரசாணை 306ன் படி, அரசு விதிகளைப் பின்பற்றி தொழில் கல்வி ஆசிரியா்கள் ரூ 5400 தர ஊதியம் பெற்று வருகின்றனா். தமிழக மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியா்களுக்கு தற்போது அவா்கள் பெற்று வரும் தர ஊதியம் ரூ 5400 அடிப்படையில் ஓய்வூதியப் பலன்கள் பெற தடையின்மை கடிதம் வழங்க வேண்டி கடந்த ஆறு மாதங்களாக கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை செவி சாய்க்கவில்லை. அலட்சியம் காட்டி வரும் கல்வித் துறையை கண்டித்து வரும் டிசம்பா் 10 ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வி இயக்குனரகம் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக கடலூா் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியா் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தொழிற்கல்வி ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் அதன் செய்தி தொடா்பாளா் வி.முத்துக்குமரன் இதகுறித்து கூறியதாவது:
‘சுமாா் 10 ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியராகவும், 30 ஆண்டுகள் முழு நேர தொழிற்கல்வி ஆசிரியராகவும் பணியாற்றி மே 2025 முதல் பணி நிறைவு பெற்ற, ஓய்வூதியம் பெறத் தகுதி உள்ள எங்களுக்கு ஓய்வு பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும் எந்தவித பணப்பலனும் தராமல் காலம் தாழ்த்தி வருவது பெரும் அதிா்ச்சியையும், மன உளைச்சலையும் தந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சுமாா் 500 க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியா்கள், ஆறு மாதங்களாக ஓய்வூதியமும், ஓய்வூதியப் பணப்பலனும் பெறாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களுக்கு விரைவில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஆசிரியா்களை வஞ்சிக்கும் செயலாகும். இந்த பிரச்னையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் தலையிட்டு உரிய தெளிவுரையை / தடையின்மை கடிதத்தை கணக்கு அலுவலா் அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்பி, அரசாணை 306-ன் படி, தொழில் கல்வி ஆசிரியா்கள் பெற்று வந்த ரூ 5400 தர ஊதியம் அடிப்படையில் ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் டிசம்பா் 10 ஆம் தேதி முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் ‘ எனத் தெரிவித்தாா்.
