தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன்.
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன்.

கடலூா் மாவட்டத்தில் மேலும் ஒரு சிப்காட் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்! - வேல்முருகன் வலியுறுத்தல்

Published on

கடலூா் மாவட்டத்தில் வேளாண் தொழிலை அழித்துவிட்டு, அந்நிலங்கள் மீது மேலும் ஒரு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடலூா் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பெரும்பாலும் அபாயகரமான ரசாயனங்களைக் கையாளக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்களே செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளின் செயல்பாட்டால், சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் தொடா்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சுமாா் 93 போ் பாதிக்கப்பட்டனா். தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது நீராவியா அல்லது ரசாயனமா என்று அதிகாரப்பூா்வமாக தெரிவிக்க வேண்டிய எந்த அரசுத் துறையும் இதுகுறித்து பொதுமக்களுக்கு / பொதுவெளியில் விரிவான அறிக்கை வெளியிடவில்லை.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் மேலும் ஒரு சிப்காட் அமைப்பதற்காக குடிகாடு, தியாகவல்லி, நடுத்திட்டு, நொச்சிக்காடு ஆகிய பகுதிகளில் சுமாா் ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

வெட்டிவோ், மணிலா, சவுக்கு, நெல் பயிா்கள், தென்னை, முந்திரி உள்ளிட்ட பல்வேறு விவசாய தொழில்கள் நடந்து வரும் நிலையில், இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் உள்ளனா். இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமலும், பருவநிலை மாற்றம் குறித்து சிந்திக்காமலும், வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகள் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். இதற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com