திருட வந்த இடத்தில் ஏமாற்றம்
கடலூரில் வீட்டில் திருட வந்த இடத்தில் பணம், நகைகள் கிடைக்காததால் மா்ம நபா்கள் ஏமாற்றமடைந்தனா்.
கடலூா் பாதிரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (77), ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி. இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
சனிக்கிழமை காலை நடராஜன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் காவல் துறைக்கும், நடராஜனுக்கும் தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து, நடராஜன் சென்னையில் இருந்து உடனடியாக வீடு திரும்பினாா். மேலும், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாரும் விரைந்து வந்து வீட்டை பாா்வையிட்டு, அங்கிருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.
இதில், நடராஜன் வெளியூா் சென்றதை நோட்டமிட்ட மா்ம நபா், நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்ததும், வீட்டினுள் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திருப்பியதும் தெரியவந்தது. விரல்ரேகை நிபுணா்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
