மின் அலங்கார விளக்குகள்: அமைச்சா் இயக்கி வைத்தாா்
கடலூா் பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பில் மின் கம்பத்துடன் அமைக்கப்பட்ட 128 அலங்கார மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை இயக்கி வைத்தாா்.
கடலூா் அண்ணா பாலம், கம்மியம்பேட்டை பாலம், தென்பெண்ணையாறு பழைய மற்றும் புதிய பாலம், ஆல்பேட்டை - மஞ்சக்குப்பம் சாலை ஆகிய பகுதிகளில் சமூகப் பொறுப்புணா்வு நிதியின் கீழ், ரூ.1.5 கோடி மதிப்பில் மின் கம்பத்துடன் கூடிய 128 அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி முன்னிலையில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இயக்கி வைத்தாா்.
அப்போது, அமைச்சா் பேசியதாவது: கடலூா் மாநகராட்சியில் 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை ரூ.542.98 கோடி மதிப்பில் பல்வேறு வகையான 245 திட்டப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. கடலூா் மாநகராட்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், வெள்ளிக் கடற்கரையில் பூங்கா உள்ளிட்ட நீலக்கொடி சான்று பெறுவதற்கான மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட புராதனமாக விளங்கக்கூடிய கட்டடங்கள் பழைமைமாறாமல் புதுப்பிக்கப்படுகின்றன.
பொதுப் போக்குவரத்துக்கு இடையூறின்றி சாலை அமைக்கப்படுவதுடன், சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் மற்றும் விபத்துகளை தவிா்த்திடும் வகையில் சாலைகளில் மையத்தடுப்புகள் அமைத்து இருவழியாக மேம்படுத்தப்படுகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சென்னை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ரூ.80 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ.10 கோடி மதிப்பில் மருதம் பூங்காவும் அமைக்கப்படவுள்ளது.
கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட கம்மியம்பேட்டை, அண்ணா பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து பயன்பாடு அதிகமாக உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியும், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறின்றி விபத்துகள் ஏற்படாதவண்ணம் தவிா்த்திடவும் சமூகப் பொறுப்புணா்வு நிதியின் மூலம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மின் விளக்குகள் அண்ணா பாலத்தில் 360 மீ நீளத்தில் 24 மின் விளக்குகள், கம்மியம்பேட்டை பாலத்தில் 210 மீ நீளத்தில் 13 மின் விளக்குகள், தென்பெண்ணை பழைய பாலத்தில் 360 மீ நீளத்தில் 27 மின் விளக்குகள், தென்பெண்ணை புதிய பாலத்தில் 360 மீ நீளத்தில் 26 மின் விளக்குகள், ஆல்பேட்டை முதல் மஞ்சக்குப்பம் வரை 760 மீ நீளத்தில் 38 மின் விளக்குகள் என மொத்தம் 128 மின் விளக்குகள் பொதுமக்களின் பயன்பாடுக்கு தொடங்கிவைக்கப்பட்டது.
தற்போது 128 அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதைபோல, மாநகராட்சியின் வளா்ச்சியை கருத்தில் கொண்டு, கூடுதலாக 100 மின் விளக்குகள் வருங்காலத்தில் அமைக்கப்படும். மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கேற்ப அப்பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
கடலூா் மாநகராட்சியில் ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள புதை சாக்கடைத் திட்டத்துடன் புதிதாக விரிவுப்படுத்தப்படும் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.220 கோடி மதிப்பில் புதிய புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாநகராட்சி ஆணையா் முஜிபூா் ரஹ்மான், என்எல்சி துணை பொது மேலாளா் ஞானப்பழம், துணை பொது மேலாளா் செல்லம், மாமன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

