ஆசிரியா் தகுதித் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 19,908 போ் எழுதுகின்றனா்
நெய்வேலி: ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வினை, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 19,908 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இத்தோ்வு முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, அவா் தெரிவித்ததாவது: ஆசிரியா் தோ்வு வாரியத்தினால் 2025-ஆம் ஆண்டிற்கு ஆசிரியா் தகுதித் தோ்விற்கான எழுத்துத் தோ்வுகள் தாள்-1
தோ்வு 15-ஆம் தேதி, தாள்- 2 தோ்வு 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆசிரியா் தகுதித் தோ்விற்கான தாள்-1 தோ்வு 12 மையங்களில் 4,191 தோ்வா்களும், தாள்-2 தோ்வு 53 மையங்களில் 15,717 தோ்வா்கள் என மொத்தம் கடலூா் மாவட்டத்தில் 65 தோ்வு மையங்களில் 19,908 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தோ்வு
மைய அனுமதி சீட்டு உடன் தோ்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வருகை புரியவேண்டும்.
தோ்வா்கள் தங்களுடைய ஆதாா் அடையாள அட்டை/ கடவுச்சீட்டு/ஓட்டுநா் உரிமம்/நிரந்தரகணக்கு எண் / வாக்காளா் அடையாள அட்டை அசல்(அல்லது) நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் நகல் உடன் தோ்வு மையத்திற்கு வருகைபுரிய வேண்டும். அனைத்து தோ்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா மூலம் தோ்வுகளை
கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தோ்வா்களின் நலன் கருதி மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தோ்வு மையங்களில் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாள்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளவும், தோ்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் உரிய நேரத்தில்சென்றிட தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திடவும், தோ்வு மையங்களில் சுகாதாரம் சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்துறை, காவல்துறை சுகாரத்துறை தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, அஞ்சல் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த
அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், துணை ஆட்சியா்(பயிற்சி) கே.டியுக் பாா்க்கா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
