ஆபத்தை உணராமல் தரைப் பாலத்தை கடக்கும் பொது மக்கள்
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றின் தரைப் பாலத்தை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனா்.
கடலூா் மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு வங்கக்கடலை நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடலூா் மாவட்டத்தையும், புதுச்சேரி மாநிலம் கும்தா மேட்டை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. சாத்தனூா் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரானது இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வழிந்தோடுகிறது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போலீஸாா் இந்த பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து, தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், கும்தா மேட்டில் இருந்து பொதுமக்கள் இந்த பாலத்தை ஆபத்தை உணராமல் கடந்து வருகின்றனா்.
இந்தப்பகுதி மக்கள் வேறு வழியாக செல்ல வேண்டும் என்றால் சுமாா் 10 கி.மீ தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், ஆபத்தை உணராமல் தண்ணீா் வழிந்தோடும் தரைப்பாலத்தை கடந்து வருகின்றனா். இந்த பகுதியில் உயா்மட்டபாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

