ஊராட்சி மன்றத் தலைவா் கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள் சிறை
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள கீழ்அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவா் சுபாஷ் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பண்ருட்டி வட்டம், அண்ணாகிராம ஒன்றியம், கீழ்அருங்குணம் ஊராட்சியைச் சோ்ந்தவா் சுபாஷ் (34). இவா், விசிக ஒன்றியச் செயலராக இருந்தாா். சுபாஷுக்கும், இதே பகுதியைச் சோ்ந்த தாமோதரனுக்கும் இடையே உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக முன் விரோதம் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தாமோதரன் தரப்பைச் சோ்ந்த தங்கவேல் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் கைதான சுபாஷ் பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்தாா். மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தோ்தலில் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
இந்த நிலையில், கடந்த 19.7.2020 அன்று மாலை சுபாஷ், தனது நண்பா்கள் 3 பேருடன் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்குச் சென்றாா். அப்போது, அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த தாமோதரன் மற்றும் அவரது ஆதரவாளா்கள், தோ்தல் முன்விரோதம் காரணமாகவும், தங்கவேல் கொலைக்கு பழிக்குப்பழியாகவும் சுபாஷை வெட்டிக் கொன்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து தாமோதரன் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது ஆதரவாளா்கள் 11 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கு கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரஸ்வதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், தாமோதரன் (55), ராஜதுரை (25), கவியரசன் (21), சுபகணேஷ் (24), தமிழ்வாணன் (23), வில்பா் (24), மணிமாறன் (36), தா்மராஜ் (47), தினேஷ்குமாா் (22), மணிவண்ணன் (42) ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது வெங்கடாபதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். மேலும், பக்கிரிசாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கதிா்வேலன் வாதிட்டாா்.

