மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்: 176 போ் கைதாகி விடுவிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். இதில் பங்கேற்ற 176 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
ஆந்திரா மாநிலத்தில் வழங்குவதைபோல தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஊனத்தின் தன்மையை பொறுத்து ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் என வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில், நவம்பா் 11-ஆம் தேதி மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராம.நடேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆளவந்தாா், மாநிலக் குழு உறுப்பினா் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், ராசையன், அப்துல் ஹமீத், இணைச் செயலா்கள் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதையடுத்து, கடலூா் புதுநகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்ளிட்ட 176 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.

